Showing posts with label Tapovan. Show all posts
Showing posts with label Tapovan. Show all posts

Tuesday, June 22, 2010

நாசிக் - 13 ஜூன் 2010

13 ஜூன் 2010 – நாசிக்
காலையில் எல்லோரும் எழுந்து குளித்து 0800 மணிக்கு தயாராகி விட்டோம். காலை சிற்றுண்டி, தங்கியிருந்த ஹோட்டலில் சாப்பிட்டு கிளம்ப தயாரானோம். முதலில் பஞ்சவடிக்கு போகலாம் என தீர்மானித்தோம். நாசிக் ஒரு விதத்தில் நம்ம கும்பகோணம் போல் தான். கோயில்கள் நிறைந்த, அழகான ஊர். பாதைகள் நல்ல அகலமாக உள்ளது. பஞ்சவடி நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து சுமார் 2 கிமீ தூரம்.

பஞ்சவடி: ராமர், சீதா, ல‌ஷ்மணர் 14 ஆண்டுகள் வனவாசம் இருந்த போது இந்த கோதாவரி நதிக் கரையில் நீராடி உள்ளனர்.!! அவர்கள் பர்ணசாலையும் இங்கு இருந்துள்ளது. இங்கு, ராமர் குண்டம், லஷ்மணர் குண்டம், சீதா குண்டம் என தனித்தனியாக உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா இங்கு மிக பிரசித்தம். ராமாயணத்தோடு ஒன்றி விட்ட ஒரு உணர்வு. அங்கிருந்த அனைத்து கோயில் சன்னதிகளையும் பார்த்தோம். கங்கே ச, யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி, நர்மதே, சிந்து, காவேரி, ஜலேஸ்மிந் ஸந்நிதிம் குரு என ஜபித்து கொண்டு, ஜலத்தை ப்ரோஷணம் செய்து கொண்டோம். கோதாவரியில், புஷ்பம், நெய் விளக்கு, அடங்கிய தெப்பம் விட்டோம். பஞ்சவடியில் தங்க முலாம் பூசிய ராமர், சீதை, லஷ்மணர் பொறித்த சாவி கொத்து அப்பா எங்களுக்கு வாங்கி கொடுத்தார். அடுத்த படியாக காலா ராம் மந்திர் என்ற கோயிலுக்கு வந்தோம்.

காலா ராம் மந்திர்: 1790 ஆம் ஆண்டு, சர்தார் ஒதெகரால் கட்டப்பட்டது. கருங்கல் ராமர் இந்த கோயிலில் உள்ளதால், இந்த கோயிலின் பெயர் கருப்பு (காலா) ராமர் கோயில் என அழைக்கப் படுகிறது. நான்கு திசைகளிலும் பெரிய வாயில் உள்ளது. இந்த கோயிலின் கும்பம் 32 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டது. இந்த கோயிலின் கற்கள், ராம்ஷேஜ் என்னும் மலையிலிருந்து 23 லட்ச செலவில் 1930 ம் ஆண்டு வரவழைக்கப் பட்டதாம்..கோயில் சுமார் 70 அடி உயரம் கட்டப் பட்டுள்ளது. ப்ரஹாரம் விசாலமாக இருக்கிறது. இந்த கோயிலின் சிறப்பம்சம் என்னவென்றால், இது ராமர் வனவாசம் இருந்த போது குடியிருந்த இடம்!!
ஸ்ரீ ராமா என்றுரைத்தால் செல்வம் தழைத்தோங்கும்
ஸ்ரீ ராமா என்றுரைத்தால் சிறப்புண்டாகும்
ஸ்ரீ ராமா அன்பர்களை என்றும் ஆதரிப்பார், துன்பங்களை தீர்ப்பார்
அய்யனே எனையாளும் மெய்யனே ஸ்ரீமதே ராமானுஜாய நம:
என்ற வரிகள் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. கோயிலின் வாசலில், தாமிரத்தில் செய்யப் பட்ட விளக்குகள் எல்லோருக்கும் வாங்கி கொடுத்தார். அங்கிருந்து அடுத்த படியாக தபோவனம் என்ற இடத்திற்கு வந்தோம்.

தபோவனம்: இதற்கு ’தண்டகாரண்ய’ ஷேத்திரம். தண்டகாரண்யம் ராமாயணம் படித்த, அறிந்த அனைவருக்கும் பரிச்சயம் உள்ள பிரசித்தி பெற்ற இடம். ராமர் மற்றும் லஷ்மணர் தியானம் செய்த இடம். சூர்ப்பனகையின் நாசியை சேதம் செய்த ’இடமும்’ இதுதான். அதனாலேயே, இந்த ஊரின் பெயரும் “நாசிக்” என அழைக்கப் படுகிறது. பஞ்சவடி, மற்றும் தபோவனதிற்கு இடையில் தான் மாரீசன் மானாக வந்தது, ராவணன் சீதையை அபகரித்துக் கொண்டு போனது என குறிப்பு சொல்கிறது. இங்கு கபில – கோதாவரி நதிகளின் சங்மத்தை காணலாம். இந்தியாவில் இங்கு மட்டும் தான் லஷ்மணருக்கு கோயில் உள்ளது. இந்திரஜித்தை வதம் செய்ய 12 ஆண்டுகள் தவம் இருந்த இடம் என மற்றொரு குறிப்பு தெரிவிக்கிறது.. மிக அழகான, அமைதியான இடம். மலை குன்றின் (சுமார் 200 அடி உயரம்) மேல், தகரத்தில், ராமர், சீதை, லஷ்மணரின் சன்னியாச கோலம் அமைக்கப் பட்டுள்ளது. விஷ்ணு, ஜெயகிருஷ்ணா மேலே சென்று தொட்டு வர ஆசைபட்டதால், நாங்கள் மூவர் மேலே ஏறி தொட்டு வந்தோம். இருவருக்கும் எதோ எவரெஸ்ட் ஏறியது போல ஒரே பெருமை.

நாசிக் இன்னும் வரும்……..